புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் விஜய், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து பணியாற்றி வருகிறார். தவெக சார்பில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், தவெக தலைவர் விஜய் தொடர்ச்சியாக திமுக – பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
அதேபோல், தனது இறுதி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்த பின், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வரும் காலங்களில் தவெக முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தவெகவின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஏற்கனவே தவெகவின் பொதுச்செயலாளராக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். கடந்தாண்டு புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளன்று அவரது வீட்டிற்கே சென்று முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் உடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வரும் ரங்கசாமி, தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.