புதுச்சேரியில் வரதட்சணை கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாத 6 மாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சியடைந்த மாமியாரும் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் வசித்துவந்தவர் அண்ணக்கிளி(70). இவர்களுக்கு 3 மகள்களும், ஆனந்தராஜ் (29) என்ற மகனும் உள்ளனர். பெயிண்டரான ஆனந்தராஜ் அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் வேலை செய்த போது அங்கு லேப் டெக்னீசியன் படித்து வந்த சீர்காழியை சேர்ந்த சந்தியா என்பவரை காதலித்துள்ளார்.
வீட்டின் சம்மதத்தோடு திருமணம் நிச்சயக்கப்பட்ட போது, ஆனந்தராஜின் தாய் மற்றும் 3 மூத்த சகோதரிகளும் பெண் வீட்டில் 20 சவரன் நகை, கார் மற்றும் சீர் வரிசை பொருட்களை வரதட்சணையாக கேட்டுள்ளனர். பெண் வீட்டார் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆனந்தராஜ் தாயார் மற்றும் சகோதரிகளின் எதிர்ப்பை மீறி வரதட்சணையே வேண்டாம் என கூறி, சந்தியாவை கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்குப் பின்னர் ஆனந்தராஜின் தாயார் மற்றும் சகோதரிகள், ஆனந்தராஜ் வீட்டில் இல்லாத நேரங்களில் வரதட்சணை கேட்டு சந்தியாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 3 மாதங்களுக்கு முன்பு சந்தியா தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆனந்தராஜ் தனது மனைவியை அழைத்து கொண்டு தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். 3 மாதங்களாக வாடகை வீட்டில் மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஆனந்தராஜை, சகோதரிகள் உடம்பு சரியில்லை இங்கேயே வந்து விடு என அழைத்துள்ளனர்.
இதை நம்பிய ஆனந்தராஜ், 6 மாத கர்ப்பிணியான சந்தியாவை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வழக்கம் போல், கொடுமையை ஆரம்பித்த மாமியாரும் நாத்தனார்களும், நேற்று முன்தினம் ஆனந்தராஜ் இல்லாத நேரத்தில் கர்ப்பிணி என்றும் பாராமல் சந்தியாவை காலில் விழுக சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சந்தியா நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாமியாரும் பயத்தில் வீட்டிலேயே துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய ஆனந்தராஜும், தாய் மனைவி தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்து தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஆனந்தராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.