மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஆட்சேபம் இல்லை என கூறாவிட்டால், கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது என கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
கர்நாடக சட்டசபையில் நேற்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது. மத்திய அரசு அனுமதி கொடுத்தவுடன் அணை கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார்.
ஆனால், இதுதொடர்பாக பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல், தலைகீழாக நின்றாலும் கர்நாடகா அரசால், மேகதாது அணையை கட்ட முடியாது” என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி தமிழக – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது, அந்த அமைப்பைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ் கூறுகையில், “மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒரு மாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால், கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவே மேகதாது அணை கேட்கிறோம்” என எச்சரித்துள்ளார்.