கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர். அத்துடன் வெயில்கால நோய்களும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வெயிலுக்கு இதம் தரும் வகையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.