அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அவருக்கு மட்டுமே தொடர்பு உள்ளது என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால், ஞானசேகரனுக்கு பின்னணியில் முக்கியப் பிரமுகர்கள் சிலரும் உள்ளதாகவும் அவர்களை காப்பாற்ற அரசும், காவல்துறையும் முயற்சிப்பதாக அதிமுக, பாஜக, பாமக உள்பட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதற்கிடையே, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு குறித்து விசாரிக்க பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் புக்யா சினேஹா பிரியா, அய்மன் ஜமால், பிருந்தா ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஞானசேகரனின் வீட்டில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும், அவரிடம் விசாரணையும் நடத்தினர்.
அதேபோல், அவரிடமிருந்து ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை சைபர் க்ரைம் போலீசாரிடம் வழங்கி அதில் சேமித்து வைத்திருந்த வீடியோக்களையும் கைப்பற்றினர். சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்று ஞானசேகரனை, சென்னை காவல் ஆணையர் அருண் அண்மையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார். இந்நிலையில், புழல் சிறையில் உள்ள ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவினர் முடிவு செய்தனர்.
இதற்காக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 7 நாள் போலீஸ் காவல் கோரியிருந்தனர். இதை ஏற்றுக்கொண்டு, ஞானசேகரனை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினர். இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து ஞானசேகரனை அழைத்துச் சென்ற போலீசார், தனி இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகும் தேங்காய் பால்..!! இப்படி பயன்படுத்தி பாருங்க..!! சூப்பர் ரிசல்ட்..!!