ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்தக் கோரி 5 இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி, தற்போது சட்டப்போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது.. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தால் நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் வாரணாசி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.. அதில், 5 பெண்களின் மனு விசாரணைக்கு உகந்தது என்று தெரிவித்தது.. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மசூதி தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்து தரப்பு வழக்கு நீதிமன்றத்தில் தொடரலாம் என்று நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த தீர்ப்புக்கு முன்னதாக, வாரணாசியில் லக்னோ போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்… மேலும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..