fbpx

கோகுல்ராஜ் கொலை வழக்கு..!! யுவராஜுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை..!! தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்..!!

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை யுவராஜ் உள்ளிட்டோரின் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயார் மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த்
வெங்கடேஷ் அமர்வில் நடைபெற்றது.

யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகளை, தவறுகளை சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பு சாட்சிகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவும் வாதிட்டார். இதனிடையே, கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கோகுல்ராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளதாகவும், ஏற்கனவே வழங்கிய சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. யுவராஜ் ஊடகங்களை சாதகமாக பயன்படுத்தியுள்ளார். அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என பேட்டியளித்துள்ளார். இதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்த நீதிமன்றம், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று யுவராஜுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது. மேலும், 10 பேரின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்தது.

அதேபோல வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயார் சித்ரா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Chella

Next Post

கோகுல்ராஜ் கொலை வழக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை…..! உறுதிசெய்த சென்னை உயர்நீதிமன்றம்…..!

Fri Jun 2 , 2023
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் வருடம் மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதிமன்றம் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ள்ளிட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்க்கும் விதமாக 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கிலிருந்து 5️ பேர் விடுவிக்கப்பட்டதை எதற்கும் விதமாக, கோகுல்ராஜின் தாயார் மேல்முறையீட்டு மனுவை […]

You May Like