சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது. அதன்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 35 ரூபாய் அதிகரித்து 6,705 ரூபாய்க்கும், ஒரு சவரன் 280 ரூபாய் அதிகரித்து 53,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.89க்கு விற்பனையாகிறது. கடந்த மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 9.3 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரித்துள்ளது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இப்போது புதிய உச்சம் தொட்ட தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.