தமிழகத்தை பொறுத்தவரை நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருவது தங்கம் தான். இல்லத்தரசிகள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். எங்கெங்கோ வீடு, மனை, சென்னைக்கு மிக அருகில் என திருச்சி வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களும் தங்கத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்துள்ளனர். தங்கத்தை பொறுத்தவரை விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,800-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.70-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.74,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.