அயோத்தியில் ராமர் கோவில் கருவறை சன்னதியில் தங்க கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
அயோத்தி ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்த நிலையில் வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான முந்தைய கோவில் பூஜைகள் வரும் 16ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தேவமந்திரங்கள் முழங்க இந்த பூஜைகள் நடைபெற உள்ளது. 22ம் தேதி கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மடாதிபதிகள், சாமியார்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கருவறையில் நுழைய தங்கத்தால் செய்யப்பட்ட கதவு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கதவின் போட்டோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த கதவு என்பது தங்கத்தால் செய்யப்பட்டுள்ளதால் மினுமினுக்கிறது. கதவில் யானைகளின் வடிவங்கள் உள்ளிட்டவை பக்தர்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த ராமர் கோவிலில் மொத்தம் 392 தூண்கள், 44 கதவுகள் இருக்கும். கோவில் தூண்கள் மற்றும் சுவர்கள் கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. தெய்வங்களின் உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.