மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டாண்டு காலமாக ‘துலா உற்சவ விழா’ எனப்படும் காவிரியில் புனித நீராடும் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வானது வட நாட்டின் கும்பமேளாவிற்கு நிகராக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறைக்கு சென்று அங்கே ஓடும் காவிரியாற்றில் துலாக்கட்ட பகுதியில் மூழ்கி நீராடினால் பாவங்கள் நீங்கும் என புராண கதைகள் கூறுகின்றன. அதன்படி, ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.
எனவே லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா விழாவிற்கு மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் புனித நீராடி வருகின்றனர். இதனை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார். துலா உற்சவ முக்கிய நிகழ்வான கடையமுகத் தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 25ஆம் தேதி வேலைநாளாக செயல்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.