சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் முயற்சியாக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டருக்கு மத்திய அரசு ஏற்கனவே ரூ. 200 மானியம் வழங்கியது. கொரோனா பாதிப்பின் போதும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. மூன்று இலவச சிலிண்டர்களை வழங்கியதன் மூலம், நலிவடைந்த பிரிவினருக்கு குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு உதவுவதாக அவர் விளக்கினார்.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் ரூ.100 உயர்த்தப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இப்போது சிலிண்டர் விலை ரூ.1,680 ஆக உள்ளது. இருப்பினும், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிலையானதாகவே உள்ளது. ஜூலை 4ஆம் தேதி டெல்லியில் வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.7 உயர்த்தப்பட்டது. இருப்பினும், ஜூலை மாதத்தில் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இல்லாமல் இருப்பது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.