பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் பலவிதமான வியூகங்களை வகுத்து முனைப்போடு செயலாற்றி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சமாளிக்க மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மாற்றமின்றி ஒரே விலையில் நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று கூடும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் வாக்காளர்களை கவரும் வகையிலான மேலும் பல சலுகைகளை மத்திய அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பெட்ரோல், டீசலுக்கான விலை குறைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், இக்கூட்டத்தில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கூடவுள்ள அமைச்சரவைக் குழு கூட்டம் அனைத்து வகையிலும் மக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.