தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கப்பட உள்ளது.
தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவையும் அதிகரிக்கும். சில சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும்.
இந்நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி சிறப்பு பேருந்துகள் தொடர்பாக விரைவில் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் மக்கள் பலருக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். பலரும் முன் கூட்டியே டிக்கெட் புக் செய்வது வழக்கம். இதனால் பலரும் ரயிலில் செல்வதை விரும்புகின்றனர்.
ரயில் பயணம் என்பது பலருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் பயணிக்க பேருந்தை விட ரயில் சிறப்பானது. அதே சமயம் பட்ஜெட் ரீதியாகவும் பேருந்து, விமானத்தை விட ரயில் குறைவான கட்டணம் கொண்டது. பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன. அதோடு ரயில்களில் சிறப்பு பேருந்துகளை விட கட்டணங்கள் குறைவாக இருக்கும். உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி நன்றாக சவுகரியமாக அமர்ந்து கொள்வது வரை பல வசதிகள் இதில் உள்ளன. இந்த ரயிலில் பொதுவாக பல்வேறு இருக்கைகள் முன் பதிவில் கிடைக்கும். அதாவது அப்பர், மிடில், லோயர், சைடு அப்பர், சைடு லோயர். இதில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியான இருக்கைகளை விரும்புவார்கள்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கப்பட உள்ளது. இதற்காக மக்கள் பலரும் காத்துகொண்டு நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இரண்டின் மூலமும் டிக்கெட்டுகளை புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளை புக் செய்பவர்கள் நவம்பர் 9ஆம் தேதிக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அதே சமயம் நாளை மறுநாள் செய்தால் 10ஆம் தேதி பயணம் செய்ய முடியும்.
வரும் 14ஆம் தேதி முன்பதிவு செய்ய முயன்றால், நவம்பர் 11ஆம் தேதிக்கான டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். பலரும் தீபாவளிக்கு முதல் நாள் அதாவது நவம்பர் 11ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவார்கள் என்பதால் வரும் 14ஆம் தேதி முன்பதிவு செய்ய பலரும் முண்டியடிக்க வாய்ப்புகள் உள்ளன.