‘One Ticket’ சென்னையில் பேருந்து, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வகையில் தேர்தல் முடிவுக்கு பின் ஜூன் மாதத்தில் ஒரே இ-டிக்கெட் வசதி நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் பொதுப் போக்குவரத்து அத்தியாவசியமானதாகும். இங்கு மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் மாநகரப் பேருந்து, மெட்ரோரயில், மின்சார ரயில் என மூன்றுக்கும் தனித்தனியே பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டியுள்ளது.
இதனால் நேர விரயமும், அலைச்சலும், பயணத்தில் சிரமமும் ஏற்படுவதை தவிர்க்க, ஒருங்கிணைந்த போக்குவரத்தை தமிழக அரசு ஏற்படுத்த உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒரே ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தி, அனைத்து பொதுப் போக்குவரத்திலும் பயணிக்கலாம்.
இந்தியாவில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் ஒரே ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தும் வசதி உள்ள நிலையில், இந்தியாவில் முதன்முறையாக செல்போன் செயலி மூலம் இ-டிக்கெட் பெற்று, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3 விதமான போக்குவரத்திலும் பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமமான ‘கும்டா’ இதற்கான நடவடிக்கைகளை துவக்கியது.சென்னையில் பல்வேறு போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த பொதுவான, க்யூ.ஆர்., குறியீடு வாயிலாக டிக்கெட் வழங்கும் முறையை அமல்படுத்த, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறுகள் தனியார் கலந்தாலோசகர் வாயிலாக பெறப்பட்டது.
இதையடுத்து, பொதுவான டிக்கெட் முறைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்க டெண்டர் கோரப்பட்டது. இதில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், எந்த நிறுவனத்தின் தொழில்நுட்பம் ஏற்றது என்பதை முடிவு செய்வதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இறுதி முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளதாக கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன் 4ல் தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஒரே டிக்கெட் திட்டம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Readmore: Heat wave: இன்று வாக்குப்பதிவின் போது வெப்ப அலை…? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்…!