புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே டாஸ்மாக் மதுபான பாரில், விற்பனையை அதிகரிக்க இலவச திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இப்பகுதியில் 8 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், இந்த கடைகளின் அருகே பார்கள் செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு உரிய தொகை செலுத்தி பார்களை ஏலம் எடுத்தவர்கள், அதே தொகையை பேக்கேஜ் முறையில் மாவட்ட அளவில் டெண்டர் எடுத்த தனியார் நிறுவனத்துக்கும் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏலம் எடுத்தவர்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதனைத் தவிர்க்க, அதிக வாடிக்கையாளர்களை பாருக்கு வரவழைத்து கல்லா கட்ட பார் உரிமையாளர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக, இரண்டு பார்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக காலை, மாலை நேரங்களில் 4 இட்லியுடன், அவித்த முட்டை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இங்கு கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே போல திருச்சி மாநகரில் 11 டூ 11 என பார்கள் ஆங்காங்கே திடீரென முளைக்கத் தொடங்கி உள்ளன. இந்த பார்களில் குவாட்டர், பீர் அனைத்திற்கும் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதை எல்லாம் கடந்து, தினந்தோறும் 24 மணி நேரமும் செயல்படும் பார்களும் ஆங்காங்கே உண்டு. இங்கு 110 ரூபாய் சரக்கு 150 ரூபாய்க்கு 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகிறது.