தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறையானது நிலம் தொடர்பான விவகாரங்களை கையாண்டு வருகிறது. நிலம் பதிவு, பட்டா மாற்றம், அடங்கல், சிட்டா உள்ளிட்ட விவரங்கள் வருவாய் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. வருவாய் துறையும் பத்திரப் பதிவுத்துறையில் இணைந்து டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஏற்கனவே நிலம் தொடர்பான அனைத்து வகை ஆவணங்களையும் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது, வருவாய்துறை சார்பில் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். பத்திரப் பதிவுத் துறை சார்பில் பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நில வரைபட விவரங்களை பார்ப்பது உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலமாக செய்து கொள்ளலாம்.
கடந்த காலங்களில் பத்திரப்பதிவு நடைமுறைகளுக்கு நீண்ட காலம் பொதுமக்கள் அலைய வேண்டியிருந்தது. ஆனால், தற்போது டிஜிட்டல் முறையால் நொடிப்பொழுதில் பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்நிலையில், முதற்கட்டமாக நிலப்பட்டாக்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக வழங்கப்பட்டாக்களும் டிஜிட்டல் வடிவிலேயே வழங்கப்படுகிறது. மேலும், நில அளவை வரைபடங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம் வருவாய் துறையின் இணையதளத்தில் பட்டா ஏ பதிவேடு போன்ற ஆவணங்களையும் நில வரைபடங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவற்றை ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம். அந்த வகையில், தற்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், விவசாய நிலங்களின் உரிமை, சாகுபடி விவரங்களையும், பிற ஆவணங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2020இல் இதற்கான நடைமுறைகள் துவக்கப்பட்ட நிலையில், தற்போது விவசாயிகளுக்கான பிரத்யேக செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் அடங்கல் விவரங்களை இணையதளத்தில் அவர்களாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். தற்போது இதில் புதிய அம்சமாக டிஜிட்டல் முறையில் அப்டேட் செய்யப்படும் அடங்கல் விவரங்களை பொதுமக்களை பார்த்துக்கொள்ள முடியும். இதனை வருவாய்த் துறையின் www.clip.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.