வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் பேருக்கு உலர், ஈரமாவு அரைக்கும் கிரைண்டர் வாங்க ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை குறித்த அறிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உதவிடும் வகையில், பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் பேருக்கு உலர், ஈரமாவு அரைக்கும் கிரைண்டர் வாங்க ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் மதிப்பிலான வணிக ரீதியிலான கிரைண்டர் வாங்கும்போது, மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், திருநங்கைகளுக்காக ‘’அரண்” எனும் பெயரில் 2 தங்கும் இல்லங்கள், சென்னை மற்றும் மதுரையில் ரூ.64 லட்சம் செலவில் அமைக்கப்படும். அதேபோல், பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்க, தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் குழந்தைகளின் மரணங்களைத் தவிர்க்க, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயிற்சி வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.