வெளிநாடு வாழ் இந்தியர்கள் 10 நாடுகளில் இருந்து யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்குள்ள சர்வதேச மொபைல் எண் வழியாக யுபிஐயில் பதிவு செய்து பணம் அனுப்ப அனுமதி வழங்கும்படி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்றுக்கொண்டு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்ஹாங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி, ஐக்கிய அரபு எமிரேட், இங்கிலாந்து ஆகிய 10 நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் யுபிஐயில் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து பணம் அனுப்பலாம். ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அவர்கள் தங்கள் என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ கணக்குகளை சர்வதேச மொபைல் எண்ணுடன் இணைத்து யுபிஐயில் பதிவு செய்ய வேண்டும்.
அந்தந்த நாடுகளின் கைப்பேசி எண்ணின் முதல் இலக்கங்களை வைத்து பணப் பரிவா்த்தனை செய்ய அனுமதி அளிக்கப்படும். விரைவில் பிற நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்பிசிஐ தலைவா் விஷ்வாஸ் படேல் கூறுகையில், ”சா்வதேச எண்ணை யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு பயன்படுத்துவது பெரும் சவாலாக இருந்தது. இந்தியாவுக்கு வரும் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும்” என்றாா்.