நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24ஐ தாக்கல் செய்கிறார்.
ஒவ்வொரு ஆண்டையும் போல், இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல துறைகள் சார்பாக அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதிலும், குறிப்பாக வரி செலுத்துவோருக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் அதிக கோரிக்கைகள் இருக்கிறது. வரி விவகாரத்தில் பெரிய அளவிலான முடிவுகள் எடுக்கப்பட்டு சுமார் 9 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால், நடப்பாண்டு பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பட்ஜெட் 2023இல் வரிசெலுத்துவோருக்கு பல்வேறு நல்ல செய்திகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரி செலுத்துபவர்களுக்கு ஆயுள் காப்பீட்டில் அளிக்கப்படும் விலக்கின் அளவு பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 80C-ல் இருந்து காப்பீட்டுத் திட்டங்கள் விலக்கப்படலாம்.

தற்போதைய விதிகளில் இபிஎஃப், பிபிஎஃப் மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்கள் 80Cன் கீழ் வரி விலக்கு பெறுகிறது. அவற்றின் வரம்பு ரூ.1.50 லட்சம் மட்டுமே ஆகும். இம்முறை ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை 80Cன் கீழ் 2வது துணைப் பிரிவில் அரசு சேர்க்கக்கூடும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் 80C-யிலேயே கூடுதல் விலக்குக்கான வசதி செய்யப்படலாம். அத்துடன் இதன் மூலமாக வரிசெலுத்துவோர் ரூ.1.50 லட்சத்திற்கு மேலான தொகைக்கும் வரி விலக்கு பெறுவதற்கான வசதி கிடைக்கும்.