பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வரி மாற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை பாதிக்கும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மத்திய பட்ஜெட்டில் போன், லேப்டாப், டிவி ஆகியவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட வாய்ப்பிருப்பதால், எலக்ட்ரானிக் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு சமீபகாலமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதனால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரிச்சலுகையோ அல்லது வேறு சில சலுகைகளோ அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், மொபைலுக்கான ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புக்கான செலவுகள் அதிகரித்து வருவதாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறி வரும் நிலையில், இந்தத் துறைக்கு என்ன மாதிரியான தீர்வு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மேலும் விலைக் குறைப்பு, வரி விலக்கு போன்ற விஷயங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். டிஜிட்டல் சார்ந்த பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தால் மக்கள் அதிகம் பயனடைவார்கள். எனவே, இந்தாண்டு மத்திய பட்ஜெட்டில் என்ன மாதிரியான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.