இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் வேலையிழப்பு, சம்பள குறைப்பு எனக் கடும் நெருக்கடியை மக்கள் சந்தித்தனர். அப்போது, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம், 2020ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்கக் காலத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தனிநபர்களுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியத்தை மத்திய அரசு இலவசமாக வழங்கியது.
2013இல் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், இந்தியாவின் மக்கள் தொகையில் 67 சதவீதத்தினர் மானியத்துடன் கூடிய உணவு தானியங்களைப் பெறுவதற்கான சட்டபூர்வ உரிமையை வழங்குகிறது. இச்சட்டத்தின்படி தற்போது 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் சுமார் 81.35 கோடிப் பயனாளர்கள் பயன்பெறுவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகம் வாயிலாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மாதம் 2.04 லட்சம் டன் அரிசியை இலவசமாக வழங்குகிறது.
இந்நிலையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம் அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.