கூகுள் நிறுவனம் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது பணி மற்றும் சம்பள உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் சமீபத்தில் பணி நீக்க நடவடிக்கை எடுத்ததை யாராலும் நம்பவே முடியவில்லை. கூகுளில் வேலைக்கு சேர்ந்து விட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் பணிநீக்கு நடவடிக்கைகள் பின்னர் தற்போது கூகுள் நிறுவனம் பதவி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சீனியர் ஊழியர்கள் பதவி உயர்வை பெறுவார்கள் என்றும் சம்பள உயர்வையும் பெறுவார்கள் என்றும் கூகுள் செயல்முறை மேலாளர் தெரிவித்துள்ளார்.
கூகுள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம் என்பதால் அதற்கேற்ப வகையில் ஊழியர்களுக்கும் மரியாதை தர முடிவு செய்துள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் செயல் திறன் மதிப்பாய்வு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஊழியர்களின் மதிப்பீடுகள் கணிக்கப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும் என்றும் அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த மாதம் அதிக ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவார்கள் என்றும் சம்பள உயர்வு பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
செலவு குறைப்பு நடவடிக்கையாக கடந்த ஜனவரி மாதம் 12,000 ஊழியர்களை கூகுள் பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு பதவி உயர்வு குறித்த மின்னஞ்சலை அனுப்பி இருப்பது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும் சீனியர் ஊழியர்களுக்கு தரும் மரியாதையாக இந்த பதவி உயர்வு பார்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் பதவி உயர்வு பெறும் ஊழியர்களை தேர்வு செய்வதில் அந்தந்த பிரிவின் மேனேஜர்கள் முக்கிய பணியாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே உங்கள் மேனேஜர் உங்களை நல்ல மதிப்பெண்கள் போட்டு வைத்திருந்தால் உங்களுக்கு நிச்சயம் பதவி உயர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.