Magalir Urimai Thogai: மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாட்டில் மாதந்தோறும் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது 1 கோடியே 14 லட்சம் பயனாளர்கள் உள்ளனர். பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்தை உறுதி செய்யும் இந்த திட்டம் பெண்கள் முன்னேற்றத்திற்கு கைக்கொடுக்கிறது.
அடுத்த சில மாதங்களில், இன்னும் ஓரிரு லட்சம் பயனாளர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. அதாவது, இன்னும் திட்டத்தில் சேராமல் இருக்கும் தகுதிவாய்ந்த பெண்களை சேர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், வரும் மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதுதான் திமுகவின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விரிவாக்கம் செய்து அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. தற்போது இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் ரூ.1000 ஆயிரம் உரிமைத்தொகை அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு ஊக்கத்தொகை அதிகமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் ரூ.1500 முதல் ரூ.2000 வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக மாதத்தின் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வங்கிகளில் வரவு வைக்கப்பட்டு வந்தநிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே அதாவது ஜன.10ஆம் தேதி அன்றே 1000 ரூபாய் வழங்கப்பட்டது. அந்தவகையில், இம்மாதம் சர்வதேச மகளிர் தினத்தை (International Women’s Day)யொட்டி மார்ச் 8ஆம் தேதியை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை, இத்தகவலும் உறுதிசெய்யப்படவில்லை.