இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் பென்சன் தொகையை, மத்திய அரசு உயர்த்தி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில், இந்த பட்ஜெட் மூலம் சில துறைகளுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடல் பென்சன் திட்டம் என்பது அமைப்புச்சாரத் துறை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தின் பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரி, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் நிதி மேம்பாடு ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பட்ஜெட்டில் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அட்டல் பென்சன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே செல்கிறது. கடந்த 2021 மார்ச் நிலவரப்படி 2.8 கோடியாக இருந்தது. 2022 மார்ச் 31-இல் 3.62 கோடியாக உயர்ந்துள்ளது. அடல் பென்சன் திட்டத்தின் ஓய்வூதிய வரம்பை உயர்த்தினால் அதில் இணைவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.