தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு நாள் ஒன்றுக்கு மட்டுமே லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களின் பசியை போக்கிக் கொள்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகம் மூடப்படும் அல்லது பெயர் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக காலத்தில் இருந்தது போல தற்போது வரை அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அம்மா உணவகத்தை விட இன்னும் கூடுதலான பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னையில் அம்மா உணவகத்தில் உணவு உட்கொள்பவர்களிடம் கருத்து கணிப்பு செய்யப்பட்டது. அதில் அம்மா உணவகத்தில் உணவு நல்ல முறையில் வழங்கப்படுகிறதா எனவும் வேறு ஏதாவது உணவு வகைகள் மாற்றம் செய்யப்பட வேண்டுமா எனவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மதிய உணவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், குறைந்த விலையில் தேநீர் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர். தமிழகத்தில் நிதி பிரச்சனையின் காரணமாக அம்மா உணவகங்களில் சிறிதளவு விலையேற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அம்மா உணவகத்தில் கூடிய விரைவில் மாற்றங்கள் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.