Good Touch, Bad Touch மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக பெண்கள், குழந்தைகள், பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் குற்றவாளிகளை நீதித்துறை மற்றும் காவல்துறை தண்டித்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் சுயமரியாதையை வளர்க்க, “குட் டச்” மற்றும் “பேட் டச்” பற்றிப் பேசுவது அவசியமாகும். இது குழந்தைகள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவும், அசௌகரியமான சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள உதவும்.
இந்நிலையில் வரும் 26ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் குட் டச், பேட் டச் மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவ – மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.