ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ள விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்தில் ரயில்வே பணியாளர்கள், போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்தையடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடப்பதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்துள்ளன. விசாகப்பட்டினம் அனகப்பள்ளி மாவட்டங்களில் இருந்து தேவையான அளவு ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பவும், ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், காயம் அடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும், அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளை செய்யவும் முதல்வர் உத்தரவு ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளார். கண்டகப்பள்ளியில் சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணி ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள தங்களின் உறவினர்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்திய ரயில்வே அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. BSNL 08912746330, 08912744619 Airtel – 8106053051, 8106053052 BSNL – 8500041670, 8500041671 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஆந்திரா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்தது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்தார். மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கடந்த ஜூன் மாதம் ஓடிசாவின் பாலசூர் பகுதியில் ரயில் விபத்து ஏற்பட்ட அடுத்த சில மாதங்களுக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் தற்போது நடந்துள்ள ரயில் விபத்து மிகுந்த மன வேதனையை தருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டிக் கொள்கிறேன். பெரும்பாலான இந்தியர்கள் ரயில் மூலமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் அடுத்தடுத்த ரயில் விபத்து சம்பவங்கள் கவலையளிக்கிறது. ரயில்வே துறையும், மத்திய அரசும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.