தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் டாஸ்மாக் வசூலை மிஞ்சும் அளவுக்கு ஒரே நாளில் லஞ்சமாக வாங்கிய பணம் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம் என பல்வேறு அலுவலங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் 1,12,57,803- ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் நெடுஞ்சாசலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.70 லட்சம் கைப்பற்றப்பட்டது. திருவாரூர் நெடுஞ்சாலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 8,8700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக அவ்வப்போது புகார்கள் வந்தாலும் அவைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.