தலைமைச் செயலகத்தில் 161 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப்பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளில் 161 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 18-ம் தேதி காலை மற்றும் மாலையில் நடத்தப்பட உள்ளது. தலைமைச்செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் பணியில் 74 பணியிடங்களும், நிதித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர் பணியில் 29 பேரும், உதவியாளர் பணியில் 49 பேரும், நிதித்துறையில் உதவியாளர் பணியில் 9 பேரும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்தப்பணியில் சேர்வதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 21-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தில் திருத்தங்களை செப்டம்பர் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி இரவு 11.59 மணி வரையில் செய்யலாம். நியமன அலுவலரிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ் மற்றும் தடையின்மை சான்றிதழை டிசம்பர் 6-ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்யலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் நியமன அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழின் நகலையும் இணைக்க வேண்டும். விண்ணப்பதார்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு அமைச்சுப் பணி அல்லது தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவியில் தனியே அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து 5 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகள் பணிகாலம் முடித்து, தகுதிகான பருவமும் முடித்தவராக இருந்தல் வேண்டும். இந்த நியமனத்திற்கான விண்ணப்பத்தைப் பரிசீலிக்க நியமன அலுவலருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற பரிந்துரையுடன், தடையின்மைச் சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.