அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களை நேரடி பணி நியமனம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை மே 1ஆம் தேதிக்குள் கணக்கிட இறுதி செய்ய வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்ட ஆசிரியர்களை மே 31ஆம் தேதிக்குள் பணிநிரவல் செய்ய வேண்டும்.
அதேபோல், அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். பின்னர், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஜூலை 1ஆம் தேதிக்குள் மதிப்பீடு செய்து, அந்த பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துக்களை ஜூலை 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதன் மீது செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அரசாணை வெளியிடப்படும். தொடர்ந்து பணி நியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் விவரம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியக்குழு அக்.31ஆம் தேதிக்குள் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
அறிவிப்பாணை அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஜன. 31ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி, அதன் முடிவுகளை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை மே 1 முதல் 31ஆம் தேதிக்குள் முடித்து தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் இறுதிப் பட்டியலை வழங்க வேண்டும். இந்த வழிமுறைகளை பள்ளிக்கல்வி இயக்குநர், டிஆர்பி தலைவர் முறையாக கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.