நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நிதி சுதந்திரத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM- Pradhan Mantri Shram Yogi Maan-dhan) என்ற திட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.. இந்த திட்டத்தில் திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு 200 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு 72,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம்..
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டம் என்றால் என்ன ..?அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.. குறிப்பாக சாலையோர வியாபாரிகள், மதிய உணவுத் தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், செருப்புத் தொழிலாளிகள், வீட்டுப் பணியாளர்கள், சலவை தொழிலாளர்கள், ரிக்ஷா க்காரர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள் அல்லது மாத வருமானம் ரூ. 15,000/ அல்லது அதற்கும் குறைவாக உள்ள மற்றும் 18-40 வயதுடைய நுழைவு வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.
அவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS), ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) திட்டம் அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆகியவற்றின் கீழ் இருக்கக்கூடாது. மேலும், அவர்/அவள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்..
குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்: PM-SYM-ன் கீழ் உள்ள ஒவ்வொரு சந்தாதாரரும், 60 வயதை அடைந்த பிறகு, குறைந்தபட்சம் 3000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.
குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் பெறும் போது, சந்தாதாரர் இறந்தால், பயனாளியின் மனைவி, பயனாளி பெறும் ஓய்வூதியத்தில் 50% குடும்ப ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு. குடும்ப ஓய்வூதியம் மனைவிக்கு மட்டுமே பொருந்தும்.
இத்திட்டத்தில் எப்படி இணைவது? சந்தாதாரர் மொபைல் போன், சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். தகுதியான சந்தாதாரர் அருகிலுள்ள அரசு சேவை மையங்களுக்குச் சென்று, ஆதார் எண் மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்கு/ ஜன்-தன் கணக்கு எண்ணைப் பயன்படுத்தி சுய சான்றிதழின் அடிப்படையில் PM-SYM-க்கு பதிவு செய்யலாம்.
இத்திட்டத்தின் கீழ் திருமணமான தம்பதிகள் ஆண்டுக்கு 72,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி? ஒரு தம்பதி ஆண்டுக்கு 72,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதை எளிய கணக்கீடு மூலம் எளிதாக புரிந்துகொள்ளலாம்.. உதாரணமாக, ஒரு நபருக்கு 30 வயது இருந்தால், தனிநபரின் மாதாந்திர பங்களிப்பு மாதத்திற்கு சுமார் ரூ. 100 ஆக இருக்கும்.. எனவே ஒரு தம்பதியினர் மாதத்திற்கு ரூ.200 செலவிடுகிறார்கள். எனவே, தனிநபர் பங்களிப்பு ஒரு வருடத்தில் ரூ. 1200 ஆக இருக்கும், 60 வயதை எட்டிய பிறகு, தனிநபர் ஓய்வூதியமாக ஆண்டுக்கு ரூ. 36,000 கிடைக்கும்.. அதாவது, தம்பதிகளுக்கு ரூ. 72,000 ஆண்டு ஓய்வூதியம் கிடைக்கும்..