துருக்கியின் முரட்பசா அருகே அண்டல்யா பகுதியில் 63 வயதான ஹூல்யா என்ற பெண்ணும், இவருடன் 46 வயதான பிலிஸ் கப்லான் என்ற மகளும், 28 வயது பேரன் ஒகன் அல்தாய் என்பவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி மாலை பேரன் ஒகன் அல்தாய் பாட்டியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், பாட்டியோ பணம் தர மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒகன் தனது கையில் கொண்டுவந்திருந்த பெட்ரோலை ஊற்றி வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளான்.
முதலில் பாட்டி மீது தீப்பற்றி எரிந்த நிலையில், பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த இளைஞரின் அத்தையும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பேரன் வைத்த தீயால் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு தளம் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது. தீப்புகையை சுவாசித்த வாலிபர் ஒகனும் மயக்கமடைந்துள்ளார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயை அணைத்து, பேரன் ஒகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைப் பின்னர் அவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.