பிரபல ஆங்கில நாளிதழில் பணியாற்றிய பெண் பத்திரிகையாளரும், பிரபல யூடியூபருமான சினேகா பெல்சின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த சினேகா பெல்சின் (வயது 28), சென்னை அமைந்தகரையில் தனியாக வீடு எடுத்து, ஆங்கில பத்திரிகையில் எடிட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு தனது தாயின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா என்று தெரிவித்திருக்கிறார்.
இதனைப் பார்த்த தாய், தனது மகளுக்கு போன் செய்துள்ளார். நீண்ட நேரமாக போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த தாயார், சினேகா பெல்சினின் எதிர் வீட்டில் தங்கியிருந்த மனோகரன் என்பவரை தொடர்பு கொண்டு, எனது மகள் போன் எடுக்கவில்லை என்ன வென்று சென்று பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து, மனோகரனும் அங்கு சென்று, வேகு நேரமாக கதவை தட்டி பார்த்துள்ளார். ஆனால், சினேகா கதவை திறக்கவில்லை. பின்னர், இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு விரைந்த போலீசார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சினேகாவின் தங்கை கடந்த 2016ஆம் ஆண்டு நோய்வாய்பட்டு இறந்ததில் இருந்து அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக மன நல ஆலோசகரிடம் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சினேகா பெல்சின் ஆரம்பத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் யூடியூப் சேனலில் பணியாற்றி வந்தார். சாதி, பெண்ணியம் என்று முற்போக்கான விஷயங்களை பேசி வந்த சினேகா பெல்சினுக்கு ஏராளமான ஃபாலோவர்ஸ் இருந்தனர். அதைத் தொடர்ந்து பிரபல ஆங்கில நாளிதழான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார்.