மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் ஏராளம்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படித்து, தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு அமலுக்கு வந்த நிலையில், தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்சக்கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. மேலும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளுவால் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரிலும் நூற்றுக்கணக்கான தனியார் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் நேற்று முன்தினம் வெளியே அறை எடுத்து தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதுமட்டுமின்றி அதேநாளில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பீகார் மாநிலம் உதய்பூரில் உள்ள சலூம்பாரில் வசிக்கும் மெகுல் வைஷ்ணவ் என்ற மாணவரும் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரே மாதத்தில் மாணவர்கள் இங்கு தற்கொலை செய்து கொண்டதும், நீட், ஜே.இ.இ, போன்ற நுழைவுத்தேர்வுகளின் பயிற்சி நிலையங்களுக்கு பிரபலமான கோட்டா நகரில் இந்த ஆண்டில் இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.