தமிழ் தேசிய செயற்பாட்டளர்களில் ஒருவரான சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி, உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ்நாட்டின் தீவிர தமிழ் தேசிய முன்னோடிகளில் ஒருவர் சீதையின் மைந்தன். தட்சிணாமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழர் நிலம், தமிழர் உரிமைகள் தொடர்பான களங்களில் தீவிரமாக இயங்கி வந்தவர். கச்சத்தீவு மீட்புக்கான முன்னெடுப்புகள் பலவற்றையும் மேற்கொண்டார்.
கச்சத்தீவு உட்பட தமிழர் உரிமைகள் தொடர்பாக பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் தேசியத்தை முன்வைக்கும் கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் மத்தியில் சீதையின் மைந்தன் கருத்துக்கள் வரவேற்பு பெற்றுள்ளன. மாறாக திராவிட இயக்கத்தினர் மற்றும் பெரியாரிய ஆதரவாளர்கள் இவருடன் கடுமையாக முரண்பட்டிருந்தனர்.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீதையின் மைந்தன் மறைவை அடுத்து திருவள்ளூர் நெற்குன்றத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.