அமெரிக்காவில் பிரபல பாப் இசை பாடகர் ஆரன் கார்ட்டர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தம்பா பகுதியில் பிறந்தவர் ஆரன் கார்ட்டர் (வயது 34). இவருக்கு நிக் கார்ட்டர் என்ற சகோதரரும், 3 சகோதரிகளும் இருக்கின்றனர். தனது 9 வயதில் 1997ஆம் ஆண்டு முதல் ஆல்பம் ஒன்றை ஆரன் கார்ட்டர் வெளியிட்டார். ’பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்’ என்ற பாப் இசை குழுவுடன் ஒப்பந்தம் போட்டு இசை பணியாற்றினார். இந்த குழுவில் ஆரனின் சகோதரர் நிக் கார்ட்டர் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், வேலி விஸ்டா டிரைவ் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஆரன் கார்ட்டர் சந்தேகத்திற்குரிய வகையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி பகுதியின் ஷெரீப் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

ஆரனுக்கு கடந்த காலங்களில் மனநல பாதிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இவருக்கு 1 வயதில் பிரின்ஸ் என்ற மகன் உள்ளார். போதை பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக ஆரன் மற்றும் அவரது முன்னாள் மனைவியான மெலானி மார்ட்டின் ஆகியோர் தங்களது மகனை வளர்க்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தனது வீட்டில் ஆரன் கார்ட்டர் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதுபற்றி கார்ட்டரின் குடும்பத்தினர் விரைவில் அறிக்கை வெளியிட உள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.