முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், 5 முறை வெள்ளக்கோயில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான துரை. ராமசாமி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்த துரை ராமசாமி 10 ஆண்டு காலம் வெள்ளக்கோயில் ஊராட்சிமன்றத் தலைவராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் பிளவுபட்டபோது காமராஜரின் என்சிஓ-வில் சேர்ந்தார். பின்னர் காமராஜரின் திடீர் மறைவுக்குப் பிறகு, மூப்பனாருடன் சேர்ந்து கட்சியை இந்திரா காங்கிரசுடன் இணைத்தார்.
1980ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுகப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பிறகு 1984, 1989, 1991 தேர்தல்களில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். தர்மயுத்ததின் போது ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக நின்றவர் வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
இந்நிலையில், இன்று காலை வயது மூப்பு காரணமாக துரை.ராமசாமி காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.