ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்கா, பெருந்துறை சாலை, மேட்டூர் ரோடு, நசியனூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது. ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் டிக்கெட் புக்கிங் செய்யும் இடங்களில் மழைநீர் புகுந்தது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கொண்டான் கண்மாய் பகுதியில் திடீரென மழை பெய்யத் தொடங்கியதால், அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில் முத்துச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது, சூறைக்காற்று வீசிய நிலையில், அதில் அடித்து வரப்பட்ட தகர கூரை விவசாயி செல்வராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மழையின் காரணமாக தமிழ்நாட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.