பொலிவியா நாட்டின் லா பாஸ் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 31 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெற்கு பொலிவியாவில் உள்ள நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில், லாரி ஒன்று பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து 500 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 31 பேர் உயிரிழந்ததாகவும், 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் லிம்பர்ட் சோக், ”விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர வாகனங்கள் வந்தபோது, இறப்பு எண்ணிக்கை உறுதிபடுத்தப்பட்டது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்குவர். இந்த விபத்து குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்படும். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார். மேலும், அவர் தனது சமூக வலைதளத்தில், இந்த விபத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான், பொலிவியா நாட்டின் சுக்ரேவில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீண்டும் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.