வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, கீழே தள்ளிவிடப்பட்ட நிலையில், வயிற்றில் இருந்த கரு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வயிற்றில் உள்ள 4 மாதக் கரு உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வரை குழந்தையின் இதயத் துடிப்பு இருந்ததாகவும், இன்று நின்றுவிட்டதாகவும் இதனால், உடனே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட இளைஞர் ஹேமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரயிலில் இருந்து கீழே விழுந்ததில், கர்ப்பிணிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கர்ப்பிணியை மீட்ட ரயில்வே காவல்துறையினர், மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.