ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூத்தலப்பட்டு – நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தோட்டப்பள்ளி என்ற இடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கண்டெய்னர் லாரிக்கு அடியில் கார் சிக்கி கொண்ட நிலையில், காரில் பயணித்த 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இறந்தவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு மீண்டும் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.