குரூப் 2 தேர்வு (தொகுதி-2& 2A)ன் முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்றது. வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டால் வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதன் காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், இதனை ஈடு செய்யும் வகையில் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு தேர்வு முற்பகல் நடைபெற்று முடிந்தது. முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வாகும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது மற்றும் இம்மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாள்கள் திருத்தும் போது, கருத்தில் கொள்ளப்படும்.
தேர்வாணையத்தின் உடனடி அறிவுறுத்தல்களின்படி, பிற்பகல் தேர்வுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையால், தரவரிசைக்கு கருதப்படும் தாள்-II பொதுஅறிவுத்தாள் தேர்வானது எவ்வித இடையூறுமின்றி அனைத்து தேர்வு மையங்களிலும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. இந்த தாள்-2ல் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.