டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள், 8 மாதங்களைக் கடந்தும் வெளியாகாததால் தேர்வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இதில், 55,071 பேர் பங்கேற்ற நிலையில், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி-க்கு தலைவர் நியமிக்கப்படாததே ஆணையத்தின் பணிகளில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதே பயிற்சி மைய பயிற்றுநர்களின் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில், முன்னரே டிசம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிக்கு கணினி மற்றும் மதிப்பீட்டாளர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முடிவுகள் தாமதமாவது குறித்து கருத்து தெரிவிக்கும் போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்படுத்துவதுடன் பொருளாதார நெருக்கடிகளையும் சந்திப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் கடந்த 8 மாதங்களாக வெளியாகாமல் இருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், வெளிப்படை தன்மையுடனும், எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே அறிவித்துள்ளபடி டிசம்பர் மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.