நாளை குரூப் 4 தேர்வு நடப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது..
7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 எழுத்து தேர்வு, தமிழகம் முழுவதும் நாளை காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ் மொழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி பெறமுடியும்.. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் 316 வட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9,35,354 ஆண்களும், 12,67,457 பெண்களும், 131 திருநங்கைகளும், 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 விதவைகள், முன்னாள் ராணுவத்தினர் 6,635 பேரும் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
இதற்காக 7, 689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பு பணியில் 1,10,150 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1,932 பறக்கும் படைகள், 534 சிறப்பு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி மூலமாகவும் 7,689 இடங்களில் இருந்து வரும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. சென்னையில் 53 மையங்களில் 1,56,218 பேர் எழுதுகின்றனர். தேர்வினை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது..
இந்நிலையில் நாளை குரூப் 4 தேர்வு நடப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.. அந்தந்த ஆட்சியர்களின் அறிவுறுத்தல் படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிறப்பு பேருந்துகள் முறையாக நின்று செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..