’அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீது உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும்’ என அமைச்சர் ஐ.பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “அமலாக்கத்துறை யார் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதிகாரம் வைத்துள்ளவர்கள் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் நீதிமன்றம் மூலம் சரியான தீர்வு கிடைக்கும். மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவைகள் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில பொருட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தமிழக அரசு அதிகளவு வருவாய் ஈட்டி வருகிறது என்று நிர்மலா சீதாராமன் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் தற்போது நல்லாட்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறி விளைச்சல் அதிகப்படியாக உள்ளது.

எனவே, காய்கறிகள் அனைத்தும் தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 5 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது வர்த்தகர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் சேரும். ஆனால், நூறு ரூபாய் பொருளுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதம் என்றால் 15 ரூபாய் என்பது மட்டுமே வசூல் செய்ய முடியும். தற்போது வரை ஜிஎஸ்டி வரியை வசூல் செய்த ஒன்றிய அரசு 24 ஆயிரம் கோடி தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. வர்த்தகர்கள் தான் விலையை நிர்ணயம் செய்ய முடியும். அதில் தமிழ்நாடு அரசு இருக்க கூடிய ஜிஎஸ்டி வரியை வாங்க முடியாமல் இருக்கும்போது, கூடுதலாக எப்படி வரி வாங்க முடியும். வியாபாரிகள் ஜிஎஸ்டி வரியை எப்படி பொதுமக்களிடம் வாங்குகிறார்கள் என்பது தெரியாது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீது உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.