மோகன்லால் நடித்த எம்புரான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் ‘எம்புரான்’ திரைப்படம் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான நாள் முதலே பல சர்ச்சைகள் வெடித்தன. குறிப்பாக குஜராத் கலவரம் தொடர்பாக காட்சிகள் இப்படத்தில் வைக்கப்பட்டிருந்தால், வலதுசாரி அமைப்புகள் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் என்றும் அறிவித்தனர்.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த 17 காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இந்த படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக கூறி தமிழ்நாட்டில் எம்புரான் படம் திரையிட்ட திரையரங்கங்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான், எம்புரான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்படத்தில் குஜராத் கலவர காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய ராணுவத்திற்கு எதிராகவும் இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது.