சென்னை உட்பட 13 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது.
சென்னை, வேலூர் உள்பட 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அதிகபட்சமாக வேலூரில் 106.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், திருத்தணியில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. சென்னையில் 102.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
சேலம் மற்றும் தருமபுரியில் 100 டிகிரி வெப்பம் காணப்பட்டது. வளிமண்டலத்தில் தொடர்ந்து வறண்ட காற்று நிலவுவதால், இன்றும் நாளையும் இரண்டில் இருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், சிறியவர்கள், பெரியவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.