நடிகர் மாரிமுத்துவின் மரண செய்தியை கேட்டு திரையுலகமே அதிர்ந்துபோய் உள்ளது. இந்நிலையில், மாரிமுத்துவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் ஆனந்தகுமார் முக்கிய தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், ”உடலில் அசௌகரியத்தை உணர்ந்த பிறகு மாரிமுத்து கார் ஓட்டியிருக்க கூடாது. கார் ஓட்டியது என்பது அவருக்கான ஒரு ஸ்ட்ரெஸ் தான். அதனை அவர் தவிர்த்திருக்கலாம். இனிமேல் யாராவது நெஞ்சுவலி போன்ற பிரச்சனைகளை சந்தித்தால் உடனடியாக ஒருவரை உதவிக்கு அழைத்துக் கொள்ள வேண்டும். 108 ஆம்புலன்ஸை அழைத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு செல்வது தான் நல்லது.
மேலும், மாரிமுத்து சர்க்கரை வியாதிக்கு மாத்திரை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். மேலும், இதயத்தில் 2 நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு அடைப்புகளுக்கும் ஸ்டென்ட் போட்டுள்ளனர். அதன்பிறகு அதற்கான மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். டப்பிங் பேசிய இடத்தில் இருந்து அவர் கார் ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அப்போது, அவரது உடல் சில்லென்று இருந்தது. அதோடு உடல் வியர்த்துபோய் இருந்தது. நெஞ்சு வலியால் நெஞ்சை பிடித்துக் கொண்டு இறங்கினார். இதை பார்த்ததும் மருத்துவனை ஊழியர் சென்றபோது மாரிமுத்து அவர் மீது சாய்ந்துவிட்டார். ஏற்கனவே இதய கோளாறு இருந்தது மற்றும் இப்போது ஸ்ட்ரெயின் செய்ததால் இந்த பிரச்சனை வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
இங்கு வரும்போதே அவருடைய பல்ஸ் எல்லாம் குறைந்து போய் இருந்தது. அவரை காப்பாற்றும் நோக்கத்தில் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மசாஜ், வென்ட்டிலேசன், உயிர் காக்கும் மருந்துகள் வழங்கப்பட்டது. 15 முதல் 20 நிமிடம் சிகிச்சை வழங்கி முயற்சித்தோம். இருந்தாலும் அவரைக் காப்பாற்ற முடியல. அவங்க வீட்டுக்கு சொன்னோம் அவங்களும் ஏற்றுக் கொண்டாங்க. பின்னர் எங்களுடைய ஆம்புலன்ஸ்ல தான் அவருடைய உடலை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.
இப்படி நெஞ்சு வலிக்கும் போது ரொம்ப அழுத்தம் கொடுக்கக் கூடாது. இந்த மாதிரியான டைம்ல கார் ஓட்டவோ, நடக்கவோ ,வேற ஏதாவது வேலையோ பண்ணக்கூடாது” என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.