சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் 53ஆம் ஆண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அதிமுக ஆட்சியில் காவல்துறையை மரியாதையாக நடத்தினோம். ஆனால், திமுக ஆட்சியில் காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் காவல்துறை, யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், முதலாளிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக நிச்சயம் ஆட்சிக்கு வரும். 2011 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று எங்களை எல்லாம் எம்எல்ஏவாக்கினார். அவரது உடல்நிலை குன்றியிருந்த போது அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்திருக்கலாம்.
அப்படி சிகிச்சை எடுத்திருந்தால் இன்னும் பல காலம் அவர் உயிரோடு இருந்திருப்பார். இந்த கட்சியும், ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்பதால் அவர் அமெரிக்காவுக்கு செல்லவில்லை என தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த கட்சியும், ஆட்சியும் 100 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசினார். திமுகவுக்கு யாரும் விரும்பி வாக்களிக்கவில்லை. திமுகவால் கோவையில் ஒரு அமைச்சரை கூட நியமிக்க முடியவில்லை. இன்று அதிமுகவுக்கு 75 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே, அதிமுகவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என தெரிவித்தார்.